வாக்குகள் எண்ணும் பணி
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடக்கிறது.
அரியலூர்:
வாக்கு எண்ணும் மையங்கள்
அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளுக்கு, 34 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படவுள்ளன. இதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு, 38 வாக்குச்சாவடிகளிலும், உடையார்பாளையம் பேரூராட்சியில் 14 வார்டுகளுக்கு, 14 வாக்குச்சாவடிகளிலும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு, 15 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று எண்ணப்படவுள்ளன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களில் தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டு, அதனைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இவ்வாக்கு எண்ணும் பணிகளில் நுண்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட நிலைகளில் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
9 மேஜைகளில் 45 சுற்றுகளாக...
அரியலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுவது குறித்து கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரமணசரஸ்வதி கூறுகையில், அரியலூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் 4 மேஜைகளில் 9 சுற்றுகளாகவும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் பதிவான வாக்குகள் 3 மேஜைகளில் 7 சுற்றுகளாகவும், உடையார்பாளையம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் 1 மேஜையில் 14 சுற்றுகளாகவும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் பதிவான வாக்குகள் 1 மேஜையில் 15 சுற்றுகளாகவும் என மொத்தம் 9 மேஜைகளில் 45 சுற்றுகளாக வாக்குகள் எண்ணி முடிக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக்கூடம் ஆகியவற்றிற்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்படுகிறது, என்றார்.
பாதுகாப்பு பணியில் 615 போலீசார்
வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்டோர் அடையாள அட்டை, முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றின் முடிவின்போதும் முடிவுகளை தெரிவிப்பதற்காக ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் நிகழ்வுகளை கண்காணிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் 237 போலீசாரும், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 378 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தனிவழி
நகராட்சி அலுவலகத்திற்க்கு வேட்பாளர்கள் வருவதற்கு இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு தனிவழி அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வராமல் இருப்பதற்கு குறியீடுகள் போடப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.