‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாவட்டம் சர்வேயர் காலனி பாண்டியன் நகர் சீரமைப்புக்காக தோண்டப்பட்ட சாலை மூடப்படாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்ற வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்க மறுக்கிறார்கள். நோயாளிகள், பொதுமக்களின் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை தேவை
மதுரையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தினமும் பல பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் பயணிகள் செல்லும் பஸ்களில் அதிக குப்பை, மண் ஆகியவை காணப்படுகிறது. பஸ்சை சரியாக பராமரிக்காத காரணத்தினால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களை பராமரிக்க வேண்டும்.
எாியாத தெரு விளக்குகள்
மதுரை மாவட்டம் பொதிகை நகர் 1 மற்றும் 2-வது வார்டு தெருவில் உள்ள தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் பெண்கள், குழந்தைகள் வீட்டிலிருந்து வெளியே வருவதில்லை. தினமும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சமூக விரோதிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் தெரு விளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதமடைந்த மின்கம்பம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி வடக்கு தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து மின்கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குழந்தைகள் பெரும் சாலையில் நடக்க அச்சப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மின்வாரிய துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.
நூலகமாக மாற்றப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அரசு ஆசிரியர்கள் குடியிருப்பு பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கட்டிடத்தை பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனை கடந்து செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாழடைந்த கட்டிடத்தை சீரமைத்து அதனை நூலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை வசதி
மதுரை மாவட்டம் மேலக்கால் மெயின் ரோடு 22-வார்டு கோச்சடை அருகே கானை அம்பலக்காரர் தெருவில் பேவர்பிளாக் சாலை வசதி வேண்டும். இதனால் மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் நீரானது நிலத்தடி நீராக மாறும். இந்த பகுதியில் உள்ள செடிகள், கொடிகள் நல்லமுறையில் வளர்ந்து மழை பெய்ய வழிவகுக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
போக்குவரத்து நெரிசல்
மதுரை காமராஜர் சாலை முனிச்சாலை-கணேஷ் தியேட்டர் செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது. பள்ளி மாணவ-மாணவிகள் இந்த சாலையை பயன்படுத்த மிகவும் சிரமப்படுகின்றனர். பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வேகத்தடை இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து மாணவர்கள் நலன்கருதி வேகத்தடை அமைக்க வேண்டும்.