சங்கரன்கோவில் அருகே விவசாயி வீட்டில் திருட்டு
விவசாயி வீட்டில் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே சோலைச்சேரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு (வயது 77). விவசாயி. இவருடைய மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மதுரையில் உள்ள மகனின் வீட்டில் தங்கியிருந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ராஜகுரு சோலைச்சேரியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. மேலும் வீ்ட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் சேகரிக்கப்படும் கணினியும் திருடு போனது தெரிய வந்தது.
ராஜகுருவின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது. திருடு போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.