உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: ஈரோடு மாவட்டத்தில் 14 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை; பலத்த பாதுகாப்புடன் நடக்கிறது
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தேர்தல்
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. இதை முன்னிட்டு தமிழக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்பேரில் கடந்த ஜனவரி 28-ந் தேதி முதல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 4-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதி நிறைவடைந்தது. 5-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. 7-ந் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசிநாளாக இருந்தது. பின்னர் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சிகள், 42 பேரூராட்சிகள் என 47 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 792 வார்டுகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் வேட்பாளர் இறுதி பட்டியலின்போது பேரூராட்சி வார்டுகளில் 20 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஈரோடு மாநகராட்சியில் 51-வது வார்டில் தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த விஜயலட்சுமி போட்டியின்றி கவுன்சிலர் ஆனார். எனவே ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில் 59 வார்டுகள், 4 நகராட்சிகளில் 102 வார்டுகள், 42 பேரூராட்சிகளில் 610 வார்டுகள் என 771 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் 2 பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் 2 பேர் எதிர்பாராமல் இறந்தனர். எனவே அந்த 2 வார்டுகளுக்கும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
70 சதவீதம் வாக்குப்பதிவு
எனவே கடந்த 19-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் 769 வார்டுகளில் தேர்தல் அமைதியாக நடந்தது. ஒட்டு மொத்தமாக ஈரோடு மாவட்டம் முழுவதும் சுமார் 9½ லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 583 பேர் வாக்களித்தனர். இது 70.73 சதவீதமாகும்.
இந்த வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன.
14 மையங்கள்
இதற்காக மாவட்டம் முழுவதும் 14 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை மையம் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 59 வார்டுகளுக்கு 443 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக 42 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 42 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக 84 பேர் பணியில் ஈடுபடுகிறார்கள்.
நகராட்சிகள்
பவானி நகராட்சியில் 27 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை 4 மேஜைகளில் 4 சுற்றுகளாக நடக்கிறது.
கோபி நகராட்சி 30 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை 10 மேஜைகளில் 10 சுற்றுகளாக நடக்கின்றன. புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 18 வார்டுகளுக்கான ஓட்டுகள் 4 மேஜைகளில் 4 சுற்றுகளாக நடக்கின்றன.
2 சுற்றுகள்
42 பேரூராட்சிகளில் பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், அந்தியூர் பேரூராட்சிகளுக்கு மட்டும் 2 மேஜைகளில் 2 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 39 பேரூராட்சிகளுக்கு தலா ஒரே சுற்றில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எனவே பேரூராட்சிகளுக்கு 45 மேஜைகள், 45 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
ஈரோடு மாநகராட்சிக்கு சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு இருப்பதுபோன்று மொத்தம் 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பவானி நகராட்சிக்கு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், கோபி நகராட்சிக்கு வைரவிழா மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சத்தியமங்கலம் நகராட்சிக்கு காமதேனு கலை அறிவியல் கல்லூரியிலும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
சித்தோடு-மொடக்குறிச்சி
பேரூராட்சிகளை பொறுத்தவரை சித்தோடு வாசவி கல்லூரியில் சித்தோடு மற்றும் நசியனூர் பேரூராட்சிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளது.
மேலும் மையங்கள் மற்றும் பேரூராட்சிகள் விவரம் வருமாறு:-
மொடக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம்: அவல்பூந்துறை, சிவகிரி, கொல்லங்கோவில், மொடக்குறிச்சி, வடுகப்பட்டி, அறச்சலூர்.
கொடுமுடி-பெருந்துறை
கொடுமுடி எஸ்.எஸ்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளி:
கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூர், கிளாம்பாடி, பாசூர், ஊஞ்சலூர், வெள்ளோட்டாம்பரப்பு.
பெருந்துறை கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி:
பெத்தாம்பாளையம், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், சென்னிமலை.
பவானி-அந்தியூர்
பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி:
ஆப்பக்கூடல், ஜம்பை, பி.மேட்டுப்பாளையம், சலங்கபாளையம்.
அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி:
அந்தியூர், அத்தாணி, நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஒலகடம்.
கோபி-சத்தியமங்கலம்
கோபி கலை அறிவியல் கல்லூரி:
லக்கம்பட்டி, கூகலூர், காசிபாளையம் (கோபி), எலத்தூர், நம்பியூர், கொளப்பலூர்.
சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி:
அரியப்பம்பாளையம், பெரியகொடிவேரி, கெம்பநாயக்கன்பாளையம், வாணிப்புத்தூர்.
பவானிசாகர் உலக மீட்பர் மெட்ரிக் பள்ளியில் பவானிசாகர் பேரூராட்சி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்த பணிகளில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.