மதுரை ஐகோர்ட்டில் மனு அளிக்க முயன்று மறியல் செய்த 200 பேர் கைது
நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி நடந்தது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் மனு அளிக்க ஊர்வலமாக சென்று தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் சாலைமறியல் செய்தனர். இதில் 200 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை,
நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி நடந்தது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் மனு அளிக்க ஊர்வலமாக சென்று தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் சாலைமறியல் செய்தனர். இதில் 200 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
நிதி நிறுவன மோசடி
திருச்சியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இந்தநிலையில், முதலீடு செய்தவர்களுக்கான பணத்தை அந்த நிதி நிறுவனம் திருப்பி தராமல், மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. மொத்தம் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
இதுதொடர்பாக மதுரை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மதுரை ஐகோர்ட்டிலும் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்களில் பலர் நேற்று காலை மதுரை ஒத்தக்கடை பகுதியில் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து மதுரை ஐகோர்ட்டுக்கு சென்று நீதிபதிகளை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.
மறியல்
இதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, முதலீடு செய்த பணத்தை மீட்டு தரவேண்டும் எனவும், மோசடி செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் போலீசாருக்கும், ஊர்வலமாக சென்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின்னர் ஊர்வலமாக சென்றவர்கள், அங்குள்ள பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
200 பேர் கைது
இதனை தொடர்ந்து அங்கு வந்த உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.
மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.