திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை: வன உரிமை சட்டத்துக்கு எதிரான உத்தரவை திரும்ப பெற வேண்டும்; பழங்குடியினர் கிராமசபை தீர்மானம்
வன உரிமை சட்டத்துக்கு எதிராக திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட மாவட்ட கலெக்டரின் தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என பழங்குடியினர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாளவாடி
வன உரிமை சட்டத்துக்கு எதிராக திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட மாவட்ட கலெக்டரின் தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என பழங்குடியினர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழங்குடியினர் கிராம சபை
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு உரிமை சட்டப்படி ஆசனூர் மற்றும் சத்தியமங்கலம் வனக்கோட்டங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் கிராம சபைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் காலை ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட சோளகர் தொட்டி, தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட பாலப்படுகை, தலமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட ராமரணை, காளிதிம்பம், மாவநத்தம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பழங்குடியினர் கிராம சபைகளை கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
திரும்ப பெற வேண்டும்
தீர்மான விவரம் வருமாறு:-
வன உரிமை சட்டம் 2006-ன் படி எங்கள் வனப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்து உத்தரவிட ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு எவ்வித உரிமையும் இல்லை. எங்கள் கிராம மக்களிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ஈரோடு மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ள தடை உத்தரவு எங்களுக்கு எதிரானது. எனவே எங்களது அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டு உள்ள திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை என்ற கலெக்டரின் உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அந்தந்த கிராமங்களில் நடந்த பழங்குடியினர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.