5 கடைகளில் பயங்கர தீ விபத்து
அறந்தாங்கியில் 5 கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன.
அறந்தாங்கி
அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே காந்தி பூங்கா சாலையில் அதே பகுதியை சேர்ந்த ருக்மணி என்பவர் ஓட்டலும், ஆயிங்குடியை சேர்ந்த பாலமுருகன் செல்போன் பழுது நீக்கும் கடையும், இலுப்பூர் விலாப்பட்டியை சேர்ந்த அண்ணாமலை பிளாஸ்டிக் பொருட்கள் கடையும், அரசர்குளத்தை சேர்ந்த ரியாஸ் வாட்ச் கடையும், சரவணன் என்பவர் நகைகள் அடகு பிடிக்கும் கடையும் வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஓட்டலின் பின்புறத்தில் இருந்து திடீெரன தீப்பிடித்தது. இந்த தீ அடுத்தடுத்துள்ள மற்ற 4 கடைகளுக்கும் வேகமாக பரவியது. அதிகாலை நேரம் என்பதால் இதனை யாரும் கவனிக்கவில்லை. பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
3 தீயணைப்பு நிலைய வீரர்கள்
அதன்பேரில், அறந்தாங்கி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க கடும் முயற்சி செய்தனர். இருந்தாலும் தீ கட்டுக்குள் வராததால் கீரமங்கலம், ஆவுடையார்கோவில் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருந்தாலும், மேற்கண்ட 5 கடைகளிலும் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளுக்கு யாரும் தீ வைத்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.