சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 16 மையங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை சேலம் மாநகராட்சிக்கு 8 சுற்றுகளாக எண்ணப்படுகிறது

சேலம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) 16 மையங்களில் நடைபெறுகிறது. சேலம் மாநகராட்சிக்கு 8 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Update: 2022-02-21 20:16 GMT
சேலம், 
ஓட்டு எண்ணிக்கை
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான சேலம் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் உள்ள 695 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,514 வாக்குச்சாவடிகளில் கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அம்மாபேட்டை பகுதியில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்டத்தில் உள்ள 15 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கபட்டுள்ளன. மொத்தம் உள்ள 16 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அறிவிப்பு
இதையொட்டி சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 8 அறைகளில் வாக்கு எண்ணுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு வார்டுக்கும் குறைந்தபட்சம் 2 சுற்றுகள் வரை ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும்.
மேலும் ஒவ்வொரு வார்டுக்கும் ஓட்டுகள் எண்ணிக்கை முடிந்தவுடன் அதன் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படும். பின்னர் அடுத்த வார்டு எண்ண திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பிற்பகலுக்குள் யார் வெற்றி பெற்றார்கள் என்ற விவரம் தெரியவந்துவிடும். வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள வார்டுகள் எண்ணும் அறைக்கு செல்லும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகராட்சிகள்
இதேபோல் 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளும் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகின்றன. இதையொட்டி அங்கு மேஜைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. நகராட்சிகள், பேரூராட்சிகளை பொறுத்தமட்டில் 6 சுற்றுகள் முதல் 9 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையையொட்டி மாநகரில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமையிலும், புறநகரில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் தலைமையிலும் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
முகவர்கள் உள்பட அனைவரும் சோதனைக்கு பின்னரே மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்