மந்திரி ஈசுவரப்பா பதவி விலக கோரி காங்கிரசாரின் போராட்டத்தால் 4-வது நாளாக சபை முடங்கியது

மந்தரி ஈசுவரப்பா பதவி விலக கோரி 4-வது நாளா காங்கிரசார் நேற்றும் போராட்டம் நடத்தினர். இதனால் சபை முடங்கியது. இதன் காரணமாக கூட்டத்தொடரை முன்னதாக முடிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Update: 2022-02-21 19:47 GMT
பெங்களூரு:

நீக்க வேண்டும்

  கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் நடைபெற்ற இருசபைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தை பா.ஜனதா உறுப்பினர் ராஜீவ் தொடங்கி வைத்தார்.

  இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், டெல்லி செங்கோட்டையில் காவி கொடி ஏற்றுவோம் என்று கூறிய கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பாவின் கருத்து குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தொடக்க கருத்துகளை எடுத்து வைத்தார். மந்திரி ஈசுவரப்பா தேசிய கொடிக்கு அவமானம் இழைத்துவிட்டதாகவும், அவரை மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நடவடிக்கைகள் முடங்கின

  காங்கிரஸ் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து இந்த தீர்மானத்தை சபாநாயகர் காகேரி நிராகரித்தார். இந்த நிலையில் மந்திரி ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து அன்றைய நாள் முழுவதும் சபை நடவடிக்கைகள் முடங்கின.

  அதைத்தொடர்ந்து 17, 18-ந் தேதிகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் சட்டசபை 3 நாட்கள் எதுவும் நடைபெறாமல் முடங்கியது. கடந்த 17-ந் தேதி முதல் காங்கிரஸ் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. அதாவது பகல்-இரவாக இந்த தர்ணா நடக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர்கள் இரவு நேரத்தில் சட்டசபை அரங்கிற்குள் படுத்து தூங்குகிறார்கள்.

கூச்சல்-குழப்பம்

  இந்த நிலையில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் வழக்கமான விடுமுறைக்கு பிறகு கர்நாடக சட்டசபை நேற்று மீண்டும் கூடியது. பெங்களூரு விதான சவுதாவில் காலை சபை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு நேற்று 4-வது நாளாக தர்ணா போராட்டத்தை மேற்கொண்டனர். மந்திரி ஈசுவரப்பாவை நீக்க கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் உண்டாகி அமளி ஏற்பட்டது.

  காங்கிரஸ் உறுப்பினர்களின் தர்ணாவால் 4-வது நாளாக சபை முடங்கியது. மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு முன்பு பேசிய சபாநாயகர் காகேரி, "மாநில அரசு முக்கியமான மசோதாக்களை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச வேண்டும். உங்களின் கருத்துகளை எடுத்து கூறுங்கள். அதை விடுத்து இவ்வாறு தர்ணா நடத்துவதால் எந்த பயனும் இல்லை" என்றார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டப்படி இருந்தனர்.

முன்கூட்டியே சபை ஒத்திவைப்பு

  காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் அடியோடு முடங்கியுள்ளன. சபையை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் காகேரி நேற்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

  முக்கிய மசோதாக்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அதனால் சபை இன்று (செவ்வாய்க்கிழமை) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வருகிற 25-ந் தேதி வரை நடைபெற வேண்டிய சட்டசபை கூட்டத்தொடர் முன்னதாகவே முடித்து கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்