நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயருக்கான மகுடத்தை சூடப்போவது யார்?;கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்துச் சென்று பாதுகாக்க அரசியல் கட்சிகள் திட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கான முதல் மகுடத்தை சூடப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெற்றிபெறும் கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்துச் சென்று பாதுகாக்கவும் அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகராட்சி மேயருக்கான முதல் மகுடத்தை சூடப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெற்றிபெறும் கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்துச் சென்று பாதுகாக்கவும் அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
4,366 பேர் போட்டி
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்கும், 4 நகராட்சிகளுக்கும், 51 பேரூராட்சிகளுக்கும் கடந்த 19-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 52 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 356 பேர் போட்டியிட்டனர்.
கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு 165 பேரும், குழித்துறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 83 பேரும், பத்மநாபபுரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு 111 பேரும், குளச்சல் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளுக்கு 78 பேரும் போட்டியிட்டனர். 51 பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகளில், 4 வார்டுகளில் 4 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் 824 வார்டுகளில் 3,573 பேர் போட்டியிட்டனர். மொத்தத்தில் 975 கவுன்சிலர் பதவிகளுக்கு 4,366 பேருக்கு போட்டி நடந்தது.
மும்முனை-5 முனைப் போட்டி
நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்தவரையில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. கூட்டணி அமைத்து வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தலை சந்தித்தது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு இடம் ஒதுக்காததால் 9 வார்டுகளில் அவர்கள் தனித்து போட்டியிட்டனர். ஒரே கூட்டணியில் இருந்த அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாக களம் கண்டது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தனித்தனியாக போட்டியிட்டனர். எனவே தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க.- பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கிடையே தான் கடுமையான போட்டி நிலவியது. இதனால் மாநகராட்சி தேர்தலில் மும்முனை போட்டி உள்ளது.
இதேபோல் குமரி கிழக்கு மாவட்ட பகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி தனியாகவும், அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் தனித்தனியாகவும் மும்முனை போட்டியிலேயே தேர்தலை சந்தித்தன. ஆனால் மேற்கு மாவட்ட பகுதிகளில் பல வார்டுகளில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தனித்தும், அதேபோல் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் தனித்தும் போட்டியிட்டனர். இதனால் அங்கெல்லாம் 5 முனைப் போட்டி நிலவியது.
வேட்பாளர்கள் தவிப்போடு...
19-ந் தேதி நடந்த தேர்தலில் அரசியல் கட்சியினர் எதிர்பார்த்த அளவு வாக்குப்பதிவு ஆகவில்லை.
மொத்தம் உள்ள 10,41,624 வாக்காளர்களில் 6,84,559 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். எனவே வாக்குப்பதிவின் மொத்த சதவீதம் 65.95 ஆக இருந்தது. வாக்குப்பதிவு குறைவாக இருப்பதால் இந்த வாக்குகள் யாருக்கு சாதகமாக இருக்கப்போகிறது? என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. எனவே வேட்பாளர்கள் அனைவரும் தவிப்போடு, வாக்கு எண்ணிக்கையை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களின் தவிப்புக்கு முடிவு காணும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை அமைந்துள்ளது.
மறைமுகத்தேர்தல்
100 ஆண்டுகளாக நகராட்சியாக இருந்த நாகர்கோவில், முதன்முறையாக மாநகராட்சி தேர்தலை சந்தித்துள்ளது. நாகர்கோவில் மாகராட்சியை பொறுத்தவரையில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கணிசமான வார்டுகளை கைப்பற்றும் என்று தி.மு.க. நிர்வாகிகளால் கூறப்படுகிறது. அதேபோல் அ.தி.மு.க.வினரும், பா.ஜனதாவினரும் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களும் பெரும்பாலான வார்டுகளை கைப்பற்றுவார்கள் என்று கூறுகிறார்கள். இப்படி அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிற நிலையில், வார்டு மக்களிடம் சொந்த செல்வாக்குடன் இருக்கும் சுயேச்சை வேட்பாளர்கள் சிலரும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் அடுத்த மாதம் 4-ந் தேதி நடைபெற உள்ளது. அதனால் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்கள் தான் மேயர் மற்றும் துணை மேயர்களை தேர்வு செய்யும் கதாநாயகர்களாக உள்ளனர். எனவே தேர்ந்தெடுக்கப்பட உள்ள கவுன்சிலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
சுற்றுலா அழைத்துச்செல்ல திட்டம்
நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயருக்கான மகுடத்தை சூடிக்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளுமே கடுமையான பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன. தேவையான இடங்கள் கிடைத்து விடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் மேயர் மற்றும் துணை மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க.வினர் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்கள்.
அதேபோல் இந்த தேர்தலில் தனித்தனியாக களம் கண்ட அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இணைந்து மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளை கைப்பற்ற திட்டமிட்டு அதற்கான பணிகளில் இரு கட்சிகளும் ஈடுபட்டிருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெறப்போகும் கவுன்சிலர்களையும், பா.ஜனதா கட்சியின் சார்பில் வெற்றி பெறப்போகும் கவுன்சிலர்களையும், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெறவிருக்கும் கவுன்சிலர்களையும் வருகிற 4-ந் தேதி வரை கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க அந்தந்த கட்சிகள் சார்பில் வெளியிடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று தங்க வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அச்சாரம்
இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு, குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம் ஆகிய 4 நகரசபை தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் பதவிகளை கைப்பற்றவும், 51 பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் பதவிகளை கைப்பற்றவும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது முழு பலத்தையும் பிரயோகித்து வருகின்றன. இந்த தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் பதவிகளை கைப்பற்ற மேற்கு மாவட்ட பகுதிகளில் தனித்தனியாக களம் கண்ட தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் மறைமுகத்தேர்தலின்போது கூட்டணி சேரவும், அதேபோல் பா.ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் தேவைப்பட்டால் மறைமுகத்தேர்தலில் கூட்டணி சேர்ந்து தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் பதவியை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றன.
எதுவாக இருந்தாலும் இன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெற்றி பெறும் அரசியல் கட்சிகளின் கவுன்சிலர்களின் எண்ணிக்கையே மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகியோரை தேர்வு செய்வதற்கான அச்சாரமாக அமையும் என்று அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது.