வீடு வாடகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்தது கண்டுபிடிப்பு

சிவகாசியில் வீடு வாடகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-02-21 19:20 GMT
சிவகாசி, 
சிவகாசியில் வீடு வாடகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்தது கண்டுபிடிக் கப்பட்டது. 
அதிகாரிகள் சோதனை 
சிவகாசி கீழ திருத்தங்கல் தேவராஜ் காலனி பகுதியில் ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பகுதியில் இருந்த 2 வீடுகளில் திடீர் சோதனை செய்தனர். 
அப்போது அந்த 2 வீடுகளிலும் அனுமதியின்றி காகிதகுழாய்களில் மண் அடைத்து அதில் திரி வைக்கும் பணியும் நடந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த குழாய்கள் மற்றும் திரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
குடியிருப்பு பகுதி
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தர்மராஜ் மனைவி தேன்பழம், முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் மாரியப்பன், பழனியம்மாள், ஜெயமணி, ஜேக்கப், பாலமுருகன், ரியாஷ் ஆகியோர் பட்டாசுகளை தயாரித்து வந்தது தெரியவந்தது. 
இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் ஊருக்கு ஒதுக்குபுறம் அல்லது தோட்டங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவது அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்துள்ளது. இதுபோன்று அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படும் போது விபத்துக்கள் ஏற்பட்டால் உயிர்சேதம் அதிகளவில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
எனவே மாவட்ட நிர்வாகமும், மாவட்ட போலீஸ் நிர்வாகமும் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்