வெடிகள் வெடிக்கவும், ஊர்வலங்கள் நடத்தவும் அனுமதி இல்லை-போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தேர்தல் முடிவு ெவற்றி கொண்டாட்டத்தில் வெடி வெடிப்பதற்கும், ஊர்வலங்கள் நடத்துவதற்கும் அனுமதி கிடையாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.;

Update: 2022-02-21 18:58 GMT
சிவகங்கை
தேர்தல் முடிவு ெவற்றி கொண்டாட்டத்தில் வெடி வெடிப்பதற்கும், ஊர்வலங்கள் நடத்துவதற்கும் அனுமதி கிடையாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று நான்கு இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்குகளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பாக தமிழக சிறப்பு காவல் படை போலீசாரும், அதற்கு அடுத்தபடியாக ஆயுதப்படை போலீசாரும் அதற்கடுத்தபடியாக சட்டம்-ஒழுங்கு போலீசாரும் மூன்று அடுக்குகளாக. பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் அலைபேசி, புகையிலைப் பொருட்கள், மது பாட்டில் போன்றவைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் இருந்து 200 மீட்டருக்குள் வேட்பாளர் மற்றும் முகவரி வாகனங்கள் உள்ளே வர அனுமதிக்க படமாட்டாது. 
அனுமதி கிடையாது
மேலும் வெடி வெடிப்பது, வெற்றி ஊர்வலம் கொண்டாடுவதற்கும் தொண்டர்களுக்கு அனுமதி கிடையாது. வாக்கு எண்ணிக்கை மையம் தவிர தேர்தல் நடைபெற்ற 4 நகராட்சி மற்றும் 11 பேரூராட்சிகளுக்கு அடங்கிய பகுதிகளில் மூன்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 9 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 44 இன்ஸ்பெக்டர்கள், 250 சப்-இன்ஸ்பெக்டர்உள்பட சுமார் 1800 போலீசார் அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதுதவிர 63 இருசக்கர வாகனத்திலும், 45 மொபைல் வாகனங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வருவார்கள். இதுதவிர சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தனி சிறப்பு படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்