வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வாகனங்கள் வருவதற்கு அனுமதி கிடையாது
சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அப்போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வாகனங்கள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அப்போது வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வாகனங்கள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை
தமிழகம் முழுவதும் கடந்த 19-ந்தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் இளையான்குடி, நாட்டரசன்கோட்டை, திருப்புவனம், கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய 11 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையம் மற்றும் மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வெளியே நுழைவு வாயிலில் போலீசார் சோதனை சாவடி நிலையம் அமைத்து 24 மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர தீயணைப்பு படையினரும் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையம் மற்றும் மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்கும் வகையில் அங்கு கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு அவற்றை வெளியில் இருந்து ஆய்வு செய்யும் வகையில் டி.வி.க்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
வாகனங்கள்
மேலும் வெளியில் அந்தந்த கட்சிகளின் ஏஜெண்டுகள் அமர்ந்து உள்ளே நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிப்பு காமிரா மூலம் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு முன்னதாக 100 மீட்டர் தூரத்தில் வாகனங்களை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கிருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு நடந்து செல்லும் வகையில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.