நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது யார்?
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுவது யார் என்பது பற்றிய விவரம் மாலைக்குள் தெரியவரும்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதியன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 2,15,553 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதன் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 72.39 ஆகும்.
வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளின் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு
அதன்படி காலை 7 மணிக்கெல்லாம் வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்படும். காலை 7.30 மணியளவில் அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளின் சீல் அகற்றப்பட்டு அங்கிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு சரியாக 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்படும்.
விழுப்புரம் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணுவதற்காக 14 மேஜைகளும், திண்டிவனம் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் 10 மேஜைகளும், கோட்டக்குப்பம் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் 4 மேஜைகளும், அனந்தபுரம், அரகண்டநல்லூர் ஆகிய பேரூராட்சி வாக்கு எண்ணும் மையங்களில் தலா ஒரு மேஜையும், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய பேரூராட்சி வாக்கு எண்ணும் மையங்களில் தலா 2 மேஜைகளும் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகள் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்படுவதோடு வீடியோ கேமரா மூலமும் பதிவு செய்யப்பட உள்ளது.
அடிப்படை வசதிகள்
வாக்கு எண்ணும் அறையை சுற்றிலும் இரும்புக்கம்பிகளால் வேலி போடப்பட்டு அதன் வெளியே நின்று வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்விசிறி வசதி உள்ளிட்ட வசதிகளும் பாதுகாப்பு வசதிகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது தடையில்லா மின்சார வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் மாலைக்குள் தெரியவரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பலத்த பாதுகாப்பு
வாக்கு எண்ணும் பணியையொட்டி மாவட்டத்தில் உள்ள 10 வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதோடு 3 அடுக்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.