உத்தவ் தாக்கரேயை பதவியில் இருந்து நீக்கும் முயற்சியில் சஞ்சய் ராவத் செயல்படுகிறார் சந்திரகாந்த் பாட்டீல் சொல்கிறார்
சரத்பவாரின் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரி பதவியில் இருந்து வெளியேற்றும் திட்டத்துடன் சஞ்சய் ராவத் செயல்படுகிறார் என்று பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.
புனே,
சரத்பவாரின் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரி பதவியில் இருந்து வெளியேற்றும் திட்டத்துடன் சஞ்சய் ராவத் செயல்படுகிறார் என்று பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.
புதிய குற்றச்சாட்டு
மராட்டிய பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சி தலைவர்களிடையே சமீப நாட்களாக கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது. ஒருவருக்கு ஒருவர் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்தநிலையில் மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மும்பையில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-
உத்தவ் தாக்கரே நண்பர்
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மும்பை இல்லமான மாதோஸ்ரீ அடித்தளத்தை வேரோடு பிடுங்க முயற்சிக்கிறார்.
இதை அவர் உணர்கிறாரோ இல்லையோ, உத்தவ் தாக்கரே எங்கள் நண்பர். அவர் சிவசேனா தலைவர் மறைந்த பாலசாகேப் தாக்கரேவின் மகன். நாங்கள் பல ஆண்டுகள் ஒன்றாக வேலை செய்து இருக்கிறோம்.
சஞ்சய் ராவத் யார்? அவர் சிவசேனாவுக்கு சமீபத்தில் வந்தவர். யார் அவருக்கு கற்பிக்கிறார்?
நிகழ்ச்சி நிரல்
நாங்கள் புரிந்துகொண்டவரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கொடுத்த நிகழ்ச்சி நிரலின்படி சஞ்சய் ராவத் செயல்படுகிறார் என்பதை உத்தவ் தாக்கரேவிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் முதல்-மந்திரியாகி 2 ஆண்டுகளாகி விட்ட நிலையில் உங்களை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்குவதே அவர்களின் நிகழ்ச்சி நிரலாகும்.
அவரால் சுப்ரியா சுலேவை முதல்-மந்திரி ஆக்க முடியாது என்பதால், அவருக்கு பதிலாக சஞ்சய் ராவத்தை முதல்-மந்திரியாக்க முயற்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.