வனத்துறை அலுவலகம் முன் உண்ணாவிரதம்

மலையோர கிராமங்களில் சாலைகளை சீரமைக்க அனுமதிக்க கோரி நாகர்கோவில் வனத்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஊராட்சி தலைவி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-21 18:34 GMT
நாகர்கோவில்:
மலையோர கிராமங்களில் சாலைகளை சீரமைக்க அனுமதிக்க கோரி நாகர்கோவில் வனத்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஊராட்சி தலைவி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலமோர், மாறாமலை போன்ற மலைேயார கிராமங்களில் சாலைகள் கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அங்கு தினமும் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். 
எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அனுமதிக்க வேண்டும் என வனத்துறையினரிடம்  பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 
இந்த நிலையில் சாலையை சீரமைக்க அனுமதி வழங்க கோரி மாறாமலை மற்றும் பாலமோர் பகுதிகளை சேர்ந்த மக்கள் சிலர் நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள வனத்துறை அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 
கைது
போராட்டத்திற்கு மாறாமலை ஊராட்சி தலைவி லில்லிபாய் சாந்தப்பன் தலைமை தாங்கினார். இதற்கிடையே போராட்டக்காரர்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வடசேரி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
முன்னதாக உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது. இதனால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஊராட்சி தலைவி லில்லிபாய் சாந்தப்பன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்