தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-21 18:21 GMT
திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி மாநகராட்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள பாய் கடை சந்து பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் நட்டனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். 
மணிகண்டன், காந்திமார்க்கெட்,  திருச்சி.

பூட்டப்பட்டுள்ள கழிவறையால் பயணிகள் அவதி 
திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் உள்ள முதல் பிளாட்பாரத்தில் கழிப்பறை எப்போதும் மூடியே  உள்ளது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவசர தேவைக்கு உபயோகப்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூட்டப்பட்டுள்ள கழிவறையை திறந்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலசுப்பிரமணியம், கூத்தூர், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள ஒரே மலை வாழிடம் பச்சமலை.  துறையூரிலிருந்து சோபனபுரம் வழியாக பச்சமலை செல்லும் மலைச்சாலையில் சுமார் 14 கிலோ மீட்டர் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரவணன்நடேசன், துறையூர், திருச்சி.

ஆபத்தான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் தாலுகா, பெருகமணி கிராமம், அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை செல்லும் வழியில் ஒரு மின்கம்பம் உள்ளது. இதில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக  சுடுகாட்டிற்கு செல்பவர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஸ்ரீரங்கம், திருச்சி.

நாய்கள் தொல்லை
திருச்சி வடக்கு ஆண்டாள் வீதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் சாலையில் செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.

மேலும் செய்திகள்