தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-21 18:16 GMT
அரியலூர்
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலிகள் வேண்டும்
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில் கலெக்டர் அலுவலக பஸ் நிலையத்தில் இருந்து அலுவலகத்திற்கு உள்ளே மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக மூன்று சக்கர நாற்காலிகள் இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலிகள் வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அறிவு, அரியலூர்

நாய்கள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் சாலையில் செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆமோஸ் ஐசக், ஆலங்குடி, புதுக்கோட்டை.


குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் நெய்தலூர் ஊராட்சி, கட்டாணிமேட்டில் இருந்து காளிகளம் செல்லும் தார்சாலை பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த தார்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் உயிர்ச் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நச்சலூர், கரூர்.

பாம்புகளால் பொதுமக்கள் அச்சம்
கரூர் மாநகராட்சி 44-வது வார்டு பொன்னகர் தெருவில் உள்ள கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகளில் ஏராளமான பாம்புகள் சுற்றித்திரிகிறது.  இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடக்கவே மிகவும் அச்சப் படுகின்றனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த பாம்புகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கிருஷ்ணன், கரூர்.

மேலும் செய்திகள்