ஜோலார்பேட்டை அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் ஆண்டிவட்டம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் பெங்களூருவில் தக்காளி மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மாதவி (45) என்ற மனைவியும், துர்கா (25) என்ற மகளும், வினோத் (23) என்ற மகனும் உள்ளனர்.
சேகருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சொந்த ஊரான ஆண்டிவட்டத்திற்கு வந்து தங்கி, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சேகர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.