பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றபோவது யார்?

நாளை(செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றபோவது யார்? என்பது மதியம் 1 மணிக்குள் தெரிந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2022-02-21 16:31 GMT
பொள்ளாச்சி

நாளை(செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றபோவது யார்? என்பது மதியம் 1 மணிக்குள் தெரிந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி தேர்தல்

பொள்ளாச்சி நகராட்சி 1920-ம் ஆண்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் 2-ம் நிலை நகராட்சியாகவும், 1953-ம் ஆண்டில் இருந்து முதல் நிலை நகராட்சியாகவும் செயல்பட்டது. 1983-ம் ஆண்டு முதல் தேர்வு நிலையில் இருந்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

இந்த நகராட்சியில் தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 3 முறையும் தலைவர் பதவி வகித்துள்ளது. கடந்த 1986, 1996, 2001 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் நகராட்சி தலைவர் நேரடியாக வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு நகராட்சி கவுன்சிலர்களால் மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு தி.மு.க. பெண் வேட்பாளர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

தீவிர பிரசாரம்

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தலைவர் பதவிக்கான நேரடி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது நகராட்சி தலைவர் பதவி பெண்கள்(பொது) ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போதைய தேர்தலில் வெற்றி பெறும் கவுன்சிலர்கள் மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 

இதன் காரணமாக தலைவர் பதவியை கைப்பற்றும் நோக்கில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் தங்களது மனைவி, மகள்களை தேர்தலில் நிறுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இதற்கிடையில் அரசியல் கட்சியினர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், கொலுசு உள்ளிட்டவைகளை வழங்கினர். இதனால் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்று கருதப்பட்டது. 

எதிர்பார்ப்பு

ஆனால் காலையில் விறு, விறுப்பாக நடந்த வாக்குபதிவு மதியம் 1 மணிக்கு பிறகு மந்தமானது. வாக்குப்பதிவு சதவீதமும் குறைந்தது. பணம், பரிசு பொருட்கள் வழங்கியதால் சிலர் தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை. வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததால் வெற்றி பெற்று விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

இதையடுத்து நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தபால் ஓட்டு எண்ணிக்கை சுமார் 45 நிமிடங்கள் நடைபெற கூடும். அதன்பிறகு சுமார் 3 மணி நேரத்தில் அதாவது மதியம் 1 மணிக்குள் நகராட்சியை கைப்பற்றபோவது யார்? என்பது தெரிந்து விடும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்