நகராட்சி, பேரூராட்சிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை

பொள்ளாச்சி பகுதியில் நகராட்சி, பேரூராட்சிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது

Update: 2022-02-21 16:31 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் நகராட்சி, பேரூராட்சிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணிக்கை

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 151 பேர் போட்டியிடுகின்றனர். இதேபோன்று சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 72 பேரும், ஜமீன்ஊத்துக்குளியில் 49 பேரும், ஆனைமலையில் 59 பேரும், கோட்டூரில் 104 பேரும், ஒடையகுளத்தில் 45, வேட்டைக்காரன்புதூரில் 57 பேரும் போட்டியிடுகின்றனர். 

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. பொள்ளாச்சி நகராட்சியில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான என்.ஜி.எம். கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அந்த அறை முன்பு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்ட பகுதிக்கு வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

மேலும் ஆனைமலை, ஜமீன்ஊத்துக்குளி, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிகளுக்கு ஆனைமலை வி.ஆர்.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. கோட்டூர், சமத்தூர், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிகளுக்கு கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 
இந்த நிலையில் நாளை(செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணும் பணி நடக்கிறது. இதையொட்டி பொள்ளாச்சி நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் வேட்பாளர்கள், முகவர்கள் வரும் பகுதியில் செய்ய வேண்டிய பாதுகாப்பு வசதிகள் குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் உடன் இருந்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- 

பொள்ளாச்சி நகராட்சி வாக்கு எண்ணும் மையம், கோட்டூர், ஆனைமலை வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பொள்ளாச்சி வாக்கு எண்ணும் மையத்தில் 34 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தற்பேது ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 12 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சுற்றுகள்

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் 7 மேஜைகள் அமைக்கப்பட்டு, 13 சுற்றுக்களாக வாக்கு எண்ணப்படுகிறது. 

ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் 2 மேஜைகளில் 11 சுற்றுக்கள், சமத்தூரில் 2 மேஜைகளில் 6 சுற்றுக்கள், ஆனைமலையில் 2 மேஜைகளில் 11 சுற்றுக்கள், கோட்டூரில் 2 மேஜைகளில் 21 சுற்றுக்கள், வேட்டைக்காரன்புதூரில் 2 மேஜைகளில் ஒடையகுளத்தில் 2 மேஜைகளில் சூளேஸ்வரன்பட்டியில் 2 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பிறகு மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வால்பாறை

வால்பாறை நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அங்குள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் உதவி அலுவலர்கள் வெங்கடாசலம், செல்வராஜ் முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு 6 மேஜைகளில் 13 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்