ரேஷன் கடைகளை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறை பகுதியில் ரேஷன் கடைகளை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

Update: 2022-02-21 16:31 GMT
வால்பாறை

வால்பாறை பகுதியில் ரேஷன் கடைகளை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

காட்டுயானைகள் அட்டகாசம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கடும் வெயில் நிலவுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு, நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைவு ஆகிய காரணங்களால் காட்டுயானைகள் இடம்பெயர்ந்து கேரள வனப்பகுதிக்கு செல்ல தொடங்கி உள்ளன. அவை சிறிய சிறிய கூட்டங்களாக பிரிந்து எஸ்டேட் பகுதிகள் வழியாக செல்கின்றன. அப்போது எஸ்டேட் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்கின்றன. 

இந்தநிலையில் நேற்று இரவு 11 மணியளவில் குட்டியுடன் 7 காட்டுயானைகள், காஞ்சமலை எஸ்டேட் பகுதிக்குள் புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளை தூக்கி வீசின. மேலும் அரிசியை தின்று அட்டகாசம் செய்தன. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், சிறுகுன்றா எஸ்டேட் வனப்பகுதிக்குள் காட்டுயானைகளை விரட்டினர்.

தேயிலை தோட்டம்

இதேபோன்று ஈட்டியார் எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நள்ளிரவு 2 மணிக்கு 5 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் புகுந்தது. 

தொடர்ந்து அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து அரிசி, கோதுமை ஆகிய உணவு பொருட்களை தின்றும், சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபட்டன.  சத்தம் கேட்டு வெளியே வந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டு காட்டுயானைகளை விரட்டியடித்தனர். எனினும் அவை அருகில் உள்ள தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டு இருக்கின்றன.

தீவிர கண்காணிப்பு

இதில் ஒரு தாய் யானை தனது குட்டிக்கு உணவு கொடுத்து பாதுகாத்து வருகிறது. இந்த காட்சியை பார்த்ததும், அவை கொடுத்த தொந்தரவை மறந்து விட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.  

இதையடுத்து நேற்று காலையில் அங்கு வந்த வனச்சரகர் மணிகண்டன், சேதமடைந்த ரேஷன் கடைகளை பார்வையிட்டார். மேலும் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ள பகுதியில் வாகனத்துடன் கூடுதல் வனப்பணியாளர்களை பணியில் அமர்த்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறார். இது தவிர மீண்டும் காட்டுயானைகள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்து விடாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எச்சரிக்கை

கேரள வனப்பகுதிக்கு காட்டுயானைகள் செல்ல தொடங்கி உள்ளதால் தமிழக எல்லை பகுதியில் இருக்கும் எஸ்டேட் பகுதி மக்கள் இரவில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இரவு மற்றும் அதிகாலையில் பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்