வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது
நாகை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.இதற்காக 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.இதற்காக 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம் ஆகிய 2 நகராட்சிகளுக்கும், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. இதில் 116 வார்டுகளுக்கு நடந்த வாக்குப்பதிவுக்கு 184 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
மாவட்டத்தில் 68 ஆயிரத்து 773 ஆண் வாக்காளர்களில் 46 ஆயிரத்து 221 பேர் வாக்களித்தனர். 74 ஆயிரத்து 474 பெண் வாக்காளர்களில் 52 ஆயிரத்து 888 பேர் வாக்களித்தனர். 4 மூன்றாம் பாலினத்தவர்களில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 251 வாக்காளர்களில் 99 ஆயிரத்து 109 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இன்று வாக்கு எண்ணிக்கை
வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாக்கு எண்ணிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. நகராட்சிகளுக்கு 12 மேஜைகள் அமைத்து 3 சுற்றுகளாகவும், பேரூராட்சிகளுக்கு 3 மேஜைகள் அமைத்து 5 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகிறது.
வாக்குகள் வார்டு வாரியாக எண்ணப்பட்டவுடன் உடனுக்குடன் முடிவுகள் தெரிவிக்கப்படும்.
அடையாள அட்டை
வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருவதற்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவார்கள். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதை தவிர ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.