பொதுப்பணித்துறை உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்

பாசன வாய்க்கால் கரையில் உள்ள வீடுகளை காலி செய்ய பொதுப்பணித்துறை உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-02-21 15:52 GMT
வெளிப்பாளையம்:
பாசன வாய்க்கால் கரையில் உள்ள வீடுகளை காலி செய்ய பொதுப்பணித்துறை உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கலெக்டரிடம் மனு
 கீழ்வேளூர் ஆதமங்கலம் ஊராட்சிமன்ற தலைவர் அகிலா சரவணன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆதமங்கலம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இந்த ஊராட்சியில் மாவூர் பகுதியில் இருந்து சாட்டியக்குடி செல்லும் நெடுஞ்சாலை பகுதியை ஒட்டி சித்தாறு பாசன வாய்க்கால் செல்கிறது. 
உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
இந்த பாசன வாய்க்கால் கரையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 3 தலைமுறைகளாக வசித்து வருகிறோம். அதற்கு உரிய வீட்டு வரி, மின் இணைப்பு கட்டணம் உள்ளிட்டவைகள் செலுத்தி வருகிறோம். அதே போல் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் எங்களது வீடுகளை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மாற்று ஏற்பாடு செய்யாமல் திடீரென வீடுகளை காலி செய்ய சொன்னால் எங்கு செல்வது. எனவே பாசன வாய்க்கால் கரையில் உள்ள வீடுகளை காலி செய்ய பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்