கூடலூரில் பிஎஸ்என்எல் அலுவலக கட்டிடத்தில் மரம் சரிந்து விழுந்தது

கூடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலக கட்டிடத்தில் மரம் சரிந்து விழுந்தது. அதிகாலையில் இந்த விபத்து நடந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Update: 2022-02-21 14:41 GMT
கூடலூர்

கூடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலக கட்டிடத்தில் மரம் சரிந்து விழுந்தது. அதிகாலையில் இந்த விபத்து நடந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

மரம் சரிந்து விழுந்தது 

கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காந்தி திடல் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த வழியாக தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் சாலை உள்ளதால் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. 

இந்த பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஒரு ராட்சத மரம் இருந்தது. அந்த மரம் காய்ந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு அந்த ராட்சத மரம் திடீரென சரிந்து பி.எஸ்.என்.எல். அலுவலக கட்டிடத்தின் மீது பயங்கர சப்தத்துடன் விழுந்தது. 

பெரும் விபத்து தவிர்ப்பு

இதைக்கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்து பார்வையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

பின்னர் அவர்கள் அங்கு விழுந்து கிடந்த மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு மரம் அகற்றப்பட்டது. 

இந்த மரம் சரிந்து விழுந்ததால் பி.எஸ்.என்.எல். அலுவலக கட்டிடம் மற்றும் மேற்கூரைகள் பலத்த சேதமடைந்தது. சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்தது. 
இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- 

ஆர்.டி.ஓ.விடம் மனு

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சாலையில் காய்ந்த நிலையில் இருந்த ராட்சத மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என்று ஆர்.டி.ஓ.விடம் ஏற்கனவே மனு கொடுத்து இருந்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
எனவே இனியாவது அதிகாரிகள் சாலையோரத்தில் காய்ந்த நிலையில், ஆபத்தான முறையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்ற முன்வர வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்