நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்

Update: 2022-02-21 14:18 GMT


கோவை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள், முகவர்களின் ஆலோசனை கூட்டம் கோவை நேரு நகரில் நடைபெற்றது. 

இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக முதல்-அமைச்சர் 300 இடங்களில் 3 லட்சம் மக்களிடம் காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்தார்.

 மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள், தி.மு.க. அரசின் திட்டங்களை இல்லம் தோறும் கொண்டு சென்று வாக்கு சேகரித்தனர். 

சீர்குலைக்க முயற்சி

வாக்கு எண்ணும் மையங்களுக்கு நாளை (இன்று) காலை 6.30 மணிக்கு முகவர்கள், வேட்பாளர்கள் செல்ல வேண்டும். அனைத்து பகுதியிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே முகவர்கள் வெளியே வர வேண்டும். 

தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் என முதல்- அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

 எனவே தேர்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது எதிர்க்கட்சிகள் வன்முறையை தூண்டிவிடும் நோக்கில் உள்ளது. தோல்வியை அவர்களே ஒப்புக்கொண்டதை நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் காண முடிந்தது. 

வாக்கு எண்ணிக் கையின் போது அவர்கள் நம்மை தாக்கினாலும், சுமுகமாக இருந்து வெற்றி சான்றிதழை பெற வேண்டும்.

முறியடிக்க வேண்டும்

நமது கவனம் அனைத்தும் வாக்கு எண்ணிகையில் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை சீர்குலைத்து வன்முறையை தூண்டி விட்டு நமது கவனத்தை சிதறடிக்க முயற்சிப்பார்கள். அதை நாம் முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், பையா கவுண்டர், சி.ஆர்.ராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்