திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் மறுவாக்குப்பதிவு. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் கள்ளஓட்டு போடப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டதால் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

Update: 2022-02-21 14:06 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் கள்ளஓட்டு போடப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டதால் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி வாக்குச்சாவடி மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ேபாடப்பட்டு இருந்தது.

வேட்பாளர்கள் சாலைமறியல்

திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதில் 25-வது வார்டுக்கான வாக்குப்பதிவு திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 8 பேர் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி தேர்தலின்போது 25-வது வார்டுக்கான வாக்குச்சாவடியில் மையத்தில் கள்ள ஓட்டு போடப்பட்டு உள்ளதாக கூறி மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 இதனால் அந்த வாக்குச்சாவடி மையத்தில் சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதையடுத்து கள்ள ஓட்டுகள் போடப்பட்டு உள்ளதால் வாக்குப்பதிவை நிறுத்தி மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

மறுவாக்குப்பதிவு

வேட்பாளர்கள் அளித்த மனு குறித்து மாநில தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 25-க்கு மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து நேற்று அந்த வார்டிற்கான மறுவாக்குப்பதிவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதையொட்டி வாக்குச்சாவடி மையம் அமைந்து உள்ள பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சாலையின் இருபக்கமும் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஓட்டு போட வந்த வாக்காளர்களிடம் பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர்கள் வைத்திருந்த பட்டியலில் உள்ள நபர்களை உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டது.

 தொடர்ந்து வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டு போட்டனர்.  வாக்காளர்களுக்கு இடது கையின் நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான முருகேஷ் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு எந்தவித பிரச்சினையுமின்றி நடைபெற அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

ஆள்மாறாட்டம்

சாதுக்களும் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தனர். முன்னதாக வாக்காளர்கள் ஓட்டு போட பள்ளி வளாகத்திற்குள் வரும் போது அவர்களுக்கு கைகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்டறியப்பட்டது. அப்போது சாமியார் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து ஓட்டு போட வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபருக்கு அங்கு ஓட்டு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வெளியே அனுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்ந்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கீதா வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி மைய வளாகத்தில் வேட்பாளர்களை தவிர மற்ற நபர்களை வெளியேற்ற உத்தவிட்டார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்குப்பதிவு எவ்வாறு நடக்கிறது என்று தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் மறுவாக்குப்பதிவு வெப் கேமரா, சி.சி.டி.வி. கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது.

திடீர் போராட்டம்

இதற்கிடையில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் 25-வது வார்டுக்கு அருகில் உள்ள ஆணாய்பிறந்தான், நல்லவன் பாளையம் கிராமங்களை சேர்ந்த சிலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 53 பேர் அந்த கிராமங்களை சேர்ந்த நபர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நேற்று போலீசார் மற்றும் அதிகாரிகளை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. ஓட்டு போட வந்த அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சண்முகா தொழிற்சாலை அரசு பள்ளியின் அருகில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளவர்களை ஓட்டு போட அனுமதிக்க வேண்டும். அவர்களை ஓட்டு போடக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சுயேச்சை வேட்பாளரை கண்டு சில வேட்பாளர்கள் அச்சப்படுகின்றனர் என்று தெரிவித்தனர். அவர்களிடம் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்களில் நகர் பகுதி முகவரி உள்ள வாக்காளர்கள் மட்டும் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைத்து திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 இடங்களில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 

மேலும் செய்திகள்