வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - நாளை வாக்கு எண்ணிக்கை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.;

Update: 2022-02-20 23:51 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 65.61 சதவிதம் வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக 8 மையங்கள் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவான எந்திரங்களுக்கு சீல் வைத்து வாகனங்களில் கொண்டு சென்று வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைத்தனர். அதன் பேரில் திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில் 51 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்திற்கும் அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் திருமுருகன் கலை மற்றும் அறிவியல் மையத்தில் வைக்கப்பட்டது.

இதேபோல், ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் நகராட்சியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள், பட்டாபிராம் இந்து கல்லூரியிலும் பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகள் மற்றும் திருமழிசை பேரூராட்சி ஆகியவற்றில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும். திருத்தணி நகராட்சியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கலைக் கல்லூரியிலும் பொன்னேரி நகராட்சியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் வைக்கப்பட்டது.

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 14 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக பள்ளிப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அறையில் வைக்கப்பட்டது.

அதேபோல் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதற்கான தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் பொதட்டூர்பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு கொண்டுவரப்பட்டது. அங்கு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டது.

திருத்தணி நகராட்சியில் 40 வாக்கு சாவடிகளில் பதிவான ஓட்டு எந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரிக்கு கொண்டு சென்று அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு திருத்தணி ஏ.எஸ்.பி. சாய்பரணீத் தலைமையில் ஒரு டி.எஸ்.பி., இரண்டு இன்ஸ்பெக்டர்கள், 10 பேர் துப்பாக்கி ஏந்திய போலீசார் அறையின் முன்பும், கல்லுாரி வளாகம் முழுவதும் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் ஆரணி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, நாராவாரிகுப்பம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியிலும். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் ஊத்துக்கோட்டை தென்பாஸ்கோ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

மேலும் செய்திகள்