போர் நினைவிடத்தில் இருந்து இந்தியா-75 நினைவு கூரும் சைக்கிள் பேரணி

போர் நினைவிடத்தில் இருந்து இந்தியா-75 நினைவு கூரும் சைக்கிள் பேரணியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-02-20 23:29 GMT
சென்னை,

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்திய ராணுவத்தின் தட்சின் பாரத் ஏரியா சார்பில், இந்தியாவின் 75 ஆண்டு கால சுதந்திர (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் நேற்று 75 சைக்கிள் ஓட்டுநர்களால், 75 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பேரணி (‘சைக்ளோத்தானை’) நடந்தது.

நிகழ்ச்சிக்கு தென் பிராந்திய ராணுவ தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் தலைமை தாங்கினார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவகத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காமராஜர் சாலை, அடையாறு, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பழைய மாமல்லபுரம் சாலை வழியாக முட்டுக்காடு சென்று பின்னர், மீண்டும் மூன்றரை மணி நேரத்தில் போர் நினைவிடத்தில் வந்து பேரணி நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள், காவல்துறையினர், சைக்கிள் ஓட்டுதல் குழுக்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்