கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு

கிணற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த மாணவன் உள்பட பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-02-20 23:13 GMT
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சுகேசன் (வயது 10). அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் இளங்கோ (15). இவரும் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் இளங்கோ, மேலப்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றார்.

நேற்று மதியம் இளங்கோ மற்றும் சுகேசன் இருவரும் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், அங்கு சென்று பார்த்தனர். அப்போது சுகேசன், இளங்கோ இருவரும் கிணற்றில் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கிணற்றில் குளித்த மாணவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பலியானது தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருக்கழுக்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் மிதந்த மாணவர்கள் இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்