2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு கா்நாடக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. காங்கிரசார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் கூட்டத்தொடரை இன்றுடன் முடித்து கொள்ள அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு:
காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா
கர்நாடக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான (2022) முதல் கூட்டத்தொடர் பெங்களூரு விதானசவுதாவில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையுடன் தொடங்கி இருந்தது. அதன்பிறகு, கவர்னர் உரையின் மீது விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் காகேரி அறிவித்திருந்தார். ஆனால் தேசிய கொடியை அவமதித்த விவகாரத்தில் மந்திரி ஈசுவரப்பாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையை நடத்த விடாமல் முடக்கி வந்தனர்.
குறிப்பாக மந்திரி பதவியில் இருந்து ஈசுவரப்பாவை நீக்க வேண்டும் என்று கோரி கடந்த 17-ந்தேதி சபாநாயகர் இருக்கைக்கு முன் அமர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அன்றைய தினம் இரவில் இருந்தே சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடங்கினார்கள். மறுநாளும் (18-ந் தேதி) ஈசுவரப்பா விவகாரத்தை எழுப்பி சட்டசபையை காங்கிரஸ் உறுப்பினர்கள் முடக்கினார்கள்.
இன்று மீண்டும் கூடுகிறது
இதையடுத்து சபாநாயகா் காகேரி, சபை ஒத்திவைப்பதாக அறிவித்தார். மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்பு 21-ந் தேதி (அதாவது இன்று) சபை மீண்டும் கூடும் என்று உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்களின் தர்ணா, 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கர்நாடக சட்டசபை கூடுகிறது.
ஆனால் மந்திரி பதவியில் இருந்து ஈசுவரப்பாவை நீக்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, நேற்று 4-வது நாளாக சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்துள்ளனர். இன்று 5-வது நாளாகவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இன்றுடன் முடித்து கொள்ள முடிவு?
இதனால் இன்று சட்டசபை மீண்டும் கூடியதும் ஈசுவரப்பா விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட வாய்ப்புள்ளது. அவ்வாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டால், இன்றுடன் சட்டசபை கூட்டத்தொடரை முடித்து கொள்ள அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபையை முடக்கி காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபடுவதால், எந்த விவாதமும் நடைபெறாமல் இருப்பதுடன், அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக வருகிற 25-ந் தேதியுடன் நிறைவு பெறும் கூட்டத்தொடரை இன்றுடன் முடித்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.