குமரியில் அதிக அளவு வாக்குப்பதிவு செய்த பெண்கள்
குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் அதிக அளவு வாக்குகளை பதிவு செய்தனர். ஆண்களைவிட 25,496 பெண்கள் கூடுதலாக வாக்களித்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் அதிக அளவு வாக்குகளை பதிவு செய்தனர். ஆண்களைவிட 25,496 பெண்கள் கூடுதலாக வாக்களித்தனர்.
65.95 சதவீதம் வாக்குப்பதிவு
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்கும், 4 நகராட்சிகளுக்கும், 51 பேரூராட்சிகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 5,16,868 பேர், பெண் வாக்காளர்கள் 5,24,688 பேர், திருநங்கைகள் 68 பேர் என மொத்தம் உள்ள 10,41,624 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் 3,29,529 ஆண் வாக்காளர்களும், 3,55,025 பெண் வாக்காளர்களும், 5 திருநங்கைகளும் என மொத்தம் 6,84,559 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 65.95 ஆகும்.
மாநகராட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள்தான் அதிகமாக வாக்களித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 2,47,399 வாக்காளர்களில் 74,593 ஆண் வாக்காளர்களும், 76,177 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,50,770 பேர் வாக்களித்துள்ளனர். இதில் ஆண்களைவிட 1,584 பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
நகராட்சிகள்- பேரூராட்சிகள்
கொல்லங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய நகராட்சிகளைப் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 1,10,445 வாக்காளர்களில் 32,590 ஆண் வாக்காளர்களும், 37,190 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 69,780 பேர் வாக்களித்துள்ளனர். இவற்றில் 4,600 பெண் வாக்காளர்கள், ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக வாக்களித்துள்ளனர். 51 பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் மொத்த உள்ள 6,83,780 வாக்காளர்களில் 2,22,346 ஆண் வாக்காளர்களும், 2,41,658 பெண் வாக்காளர்களும், 5 திருநங்கைகளும் என 4,64,009 பேர் வாக்களித்துள்ளனர். இவற்றில் ஆண்களைவிட 19,312 பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
25,496 பெண்கள் கூடுதல்
56 நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்கள் 10,41,624 பேரில் 3,29,529 ஆண் வாக்காளர்களும், 3,55,025 பெண் வாக்காளர்களும், 5 திருநங்கைகளும் வாக்களித்துள்ளனர்.
இவற்றில் 25,496 பெண் வாக்காளர்கள், ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.