ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகளுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2022-02-20 20:01 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகளுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 1,219 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து வாக்குசாவடி அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர் மண்டல அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக சீல் வைக்கப்பட்டு உள்ளதா? என சோதனை செய்தனர். பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
இதில், ஈரோடு மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரியிலும், பவானி நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்திலும், கோபி நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கோபி வைர விழா உயர்நிலை பள்ளிக்கூடத்தில் உள்ள கே.எம்.ஆர் ஹாலிலும், சத்தியமங்கலம் நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை அறிவியல் கல்லூரியிலும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் புஞ்சைபுளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்திலும் வைக்கப்பட்டு உள்ளன.
இதேபோல் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வாசவி கலை அறிவியல் கல்லூரியிலும், அவல்பூந்துறை, சிவகிரி, கொல்லாங்கோவில், மொடக்குறிச்சி, வடுகப்பட்டி, அறச்சலூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு உள்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்திலும், கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூர், கிளாம்பாடி, பாசூர், ஊஞ்சலூர், வெள்ளோட்டம்பரப்பு ஆகிய பேரூராட்சிகளுக்கு உள்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கொடுமுடி ஸ்ரீ சங்கரா வித்தியாலயா பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்திலும் உள்ளன.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
மேலும் பெத்தாம்பாளையம், பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், சென்னிமலை ஆகிய பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் உயர்நிலை பள்ளிக்கூடத்திலும், ஆப்பக்கூடல், ஜம்பை, பி.மேட்டுப்பாளையம், சலங்கபாளையம் ஆகிய பேரூராட்சிகளுக்கு உள்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்திலும், அந்தியூர், அத்தாணி, நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஒலகடம் ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்திலும் வைக்கப்பட்டு உள்ளன.
லக்கம்பட்டி, கூகலூர், காசிபாளையம், எலத்தூர், நம்பியூர், கொளப்பலூர் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அரியப்பம்பாளையம், பெரிய கொடிவேரி, கெம்பநாயக்கன்பாளையம், வாணிப்புத்தூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லூரியிலும், பவானிசாகர் பேரூராட்சியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் பவானிசாகர் ஹோலி ரெட்டிம்பர்ஸ் மெட்ரிக் பள்ளிக்கூடத்திலும் வைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்