வாக்கு எண்ணும் மையங்களில் 2,500 போலீசார் பாதுகாப்பு
மதுரையில் வாக்கு எண்ணும் மையங்களில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுரை,
மதுரையில் வாக்கு எண்ணும் மையங்களில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு
மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் மாவட்டத்தில் சராசரியாக 57 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது.
வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன், வாக்குச்சாவடியில் இருந்த வாக்கு எந்திரங்கள், சீல் வைக்கப்பட்டு லாரிகள் மூலம் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி, மதுரை மாநகராட்சி பகுதியில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக வசதியாக பாத்திமா கல்லூரி, வக்பு வாரிய கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோல், மேலூர் நகராட்சியில் பதிவான வாக்குகள், எஸ்.எஸ்.வி. சாலா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், திருமங்கலம் நகராட்சிக்கு பி.கே.என். பெண்கள் மேல் நிலைப்பள்ளி, உசிலம்பட்டி நகராட்சிக்கு நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.9 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள், பரவை மங்கையர்கரசி கல்லூரியிலும், பேரையூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது. இதற்காக அந்த இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பணி
இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால், வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள 9 மையங்களிலும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் 1000 போலீசாரும், நகர் பகுதியில் 1500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு அறை மற்றும் மையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அது தொடர்பான கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொண்டாட்டங்கள்
இதுபோல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட போலீஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கும் சீருடை அணியாத போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றவுடன், நடக்கும் வெற்றி கொண்டாட்டங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் தடுக்கும் வகையிலும் கண்காணிக்க போலீசாருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்றனர்.