தினத்தந்தி புகார் பெட்டி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2022-02-20 19:20 GMT
தொற்று நோய்கள் பரவும் அபாயம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக கழிவறைகள் அமைக்கப்பட்டது. இந்த கழிவறைகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் கழிவறை கட்டிட சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், கழிவறை தொட்டிகள் மற்றும் கழிவறை கோப்பைகள் உடைந்து கிடக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கழிவறைகளை பயன்படுத்து முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கழிவறையில் இருந்து கழிவுநீர் வெளியேறி பஸ் நிலைய வளாகத்துக்குள் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் உள்ள கழிவறை கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.
மேற்கூரை கம்பி சீரமைக்கப்படுமா?
தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் உள்ள பழைய கட்டிடத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக மேற்கூரையை தாங்கி பிடித்துள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து உள்ளது. மேலும், கம்பியின் அடிப்பகுதி உடைந்து உள்ளதால் மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கூரையை தாங்கிபிடித்துள்ள சேதமடைந்த கம்பியை அகற்றிவிட்டு புதிய கம்பி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.

மேலும் செய்திகள்