நெல்லையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு
நெல்லையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கு 491 வாக்குச்சாவடிகளிலும், அம்பை நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 42 வாக்குச்சாவடிகளிலும், களக்காடு நகராட்சியில் 27 வார்டுகளுக்கு 30 வாக்குச்சாவடிகளிலும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 51 வாக்குச்சாவடிகளிலும், 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகளுக்கு 319 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
நெல்லை மாநகராட்சி, சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இங்கு 6 வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு `சீல்' வைக்கப்பட்டது.
அம்பை, விக்கிரமசிங்கபுரம் ஆகிய நகராட்சிகள் மற்றும் கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அம்பை ஏ.வி.ஆர்.எம்.வி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது. இங்கு 4 வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு `சீல்' வைக்கப்பட்டது.
களக்காடு
களக்காடு நகராட்சி, மூைலக்கரைப்பட்டி, நாங்குநேரி, திசையன்விளை பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் நாங்குநேரி புனித பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது. இங்கு 4 வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு `சீல்' வைக்கப்பட்டது.
சேரன்மாதேவி, கோபாலசமுத்திரம், மேலச்செவல், முக்கூடல், பத்தமடை, வீரவநல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் சேரன்மாதேவி பெரியார் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது. அங்கு 6 வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு `சீல்' வைக்கப்பட்டது.
வள்ளியூர்
ஏர்வாடி, திருக்குறுங்குடி, பணகுடி, வடக்கு வள்ளியூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் வள்ளியூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது. இதற்காக அங்கு 4 வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு `சீல்' வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இதை அகன்ற திரைகள் மூலம் அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
`சீல்’ வைப்பு
வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாநகராட்சி, பேரூராட்சி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
இந்த வாக்கு எண்ணும் மையம் நேற்று காலையில் பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டது. அரசியில் கட்சியினர் முன்னிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் வாக்கு எண்ணும் மையத்துக்கு ‘சீல்’ வைத்தார். அப்போது அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணிக்கை
தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது.
நெல்லை மாநகராட்சி, சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சியில் பதிவான ஓட்டுகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, பேரூராட்சி வாரியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் அமர்ந்து வாக்கு எண்ணிக்கையை பார்வையிட தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு வளைவுகளும், பேரிகாட்களும், தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அடையாள அட்டை
ஓட்டு எண்ணிக்கை விவரத்தை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்ற ஊழியர்கள் காலை 6.30 மணிக்குள் வரவேண்டும். ஊழியர்களை போலீசார் அடையாள அட்டையை வைத்து சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிப்பார்கள். மேலும் வேட்பாளர்கள், முகவர்களும் அடையாள அட்டையை வைத்து சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
14 மேஜைகள்
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளர் தனக்கு தேவையான வாக்கு எண்ணும் முகவரை நியமனம் செய்யலாம். 14 மேஜைகளுக்கு தலா ஒரு நபர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு ஒரு நபர் வீதம் மொத்தம் 15 நபர்களை நியமனம் செய்யலாம்.
ஒவ்வொரு முகவரும் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரால் பிறப்பிக்கப்படும் உத்தரவினை பின்பற்ற வேண்டும். ஒழுங்கீனமாக செயல்படும் முகவர்களை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேற்ற தேர்தல் அலுவலருக்கு ழுழு உரிமை உண்டு.
தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு ஒரு மேஜை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பணியின்போது நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார் நேரடி மேற்பார்வையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.