ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் இன்று மறுவாக்குப்பதிவு

சுயேச்சை வேட்பாளரின் சின்னத்தில் குளறுபடி ஏற்பட்டதால் ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் இன்று (திங்கட்கிழமை) மறுவாக்குப்பதிவு நடக்கிறது.

Update: 2022-02-20 18:36 GMT
ஜெயங்கொண்டம்,
சின்னத்தில் குளறுபடி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 108 பேர் போட்டியிட்டனர். ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21,435 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இது 76.44 சதவீதம் ஆகும்.
இந்தநிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் அரசியல் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 6 பேர் போட்டியிட்டனர். இதில், சுயேச்சையாக போட்டியிட்ட விஜயலெட்சுமிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மரைமுருக்கி (ஸ்பேனர்) சின்னம் தபால் வாக்குச்சீட்டுகளில் திருகாணி சின்னமாக பதிவிடப்பட்டு உள்ளதாகவும், வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட மரைமுருக்கி (ஸ்பேனர்) சின்னம் சரியாக பதிவிடப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
மறுவாக்குப்பதிவு
மேலும், இந்த புகார் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளதால் இவ்வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 16-வது வார்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு வாக்குச்சாவடிகளில் இன்று (திங்கட்கிழமை) மறுவாக்குப்பதிவு நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும், இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுபாஷினி வேட்பாளர்களை அழைத்து ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த வார்டில் ஸ்டேட்பேங்க் காலனி, சீனிவாசா நகர், இந்திரா நகர், ஜோதிபுரம், கருப்பையா நகர், சிதம்பரம் ரோடு, கல்வி கிராமம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1,640 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் நேற்று முன்தினம் 1,028 பேர் வாக்களித்து இருந்தனர்.
அழியாத மை
நேற்று முன்தினம் நடைபெற்ற அதே இடத்தில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பொது வாக்காளர்களும், மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும். 
மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் இன்றைய தினமே வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச்செல்லப்படும். மேலும், இந்த வாக்குகளும் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது.
இன்று விடுமுறை
மேலும் மறு ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் 16-வது வார்டில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாக்களிக்கும் வகையில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்