தந்தை-மகனை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

ஜெயங்கொண்டம் அருகே தந்தை-மகனை தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-02-20 18:01 GMT
மீன்சுருட்டி, 
ஒர்க்‌ஷாப்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 27). இவர் மீன்சுருட்டி அருகே உள்ள மண்மலை கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். தனது கடைக்கு பின்னால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடையை விரிவுபடுத்த இரும்புக்கம்பிகளை வாங்கி வந்து வைத்திருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் கீழசெங்கல்மேடு காலனி தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் வெங்கடேஷ் (26) மற்றும் மெய்காவல் புத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (27) ஆகியோர் இரும்பு கம்பிகளை பழைய இரும்பு கடையில் போடுவதற்காக எடுத்து சென்றுள்ளனர்.
தந்தை-மகன் மீது தாக்குதல்
இதை பார்த்த ரஞ்சித்குமார் அவர்களை தடுத்து தான் வாங்கி வைத்திருந்த இரும்பு கம்பியா கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்தநிலையில், ரஞ்சித்குமார் மற்றும் அவரது தந்தை சேகர் ஆகியோர் ஒர்க்‌ஷாப்பில் இருந்தனர். 
அப்போது  வெங்கடேஷ், ராஜேஷ், கீழசெங்கல்மேடு காலனி தெருவை சேர்ந்த விக்னேஷ் (20), தியாகராஜன் (32), அஜித் (22) மெய்காவல் புத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த ஆகாஷ் (23), சபாபதி (17) ஆகியோர் தந்தை-மகனை தகாத வார்த்தைகளால் பேசி அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. 
7 பேர் மீது வழக்கு
இதில், படுகாயமடைந்த சேகர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ரஞ்சித்குமார் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து தந்தை-மகனை தாக்கிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். பின்னர் ராஜேஷை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்