சென்னையில் மர்மமான முறையில் இறந்த என்ஜினீயர் உடலை நண்பர்கள் வீட்டின் முன்பு வைத்து உறவினர்கள் திடீர் போராட்டம்

சென்னையில் மர்மமான முறையில் இறந்த என்ஜினீயரின் உடலை அவரது நண்பர்கள் வீ்ட்டின் முன்பு வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2022-02-20 17:48 GMT

சங்கராபுரம்

என்ஜினீயர்

சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சிவசங்கரன்(வயது 26). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்ததாக தெரிகிறது. 
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அதே ஊரைச் சேர்ந்த தாமோதரன் மற்றும் ஆனந்தன் ஆகியோருடன் சிவசங்கரன் சென்னைக்கு சென்றார். பின்னர் ஆனந்தன், தாமோதரன் ஆகிய இருவர் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது அவர்களிடம் சிவங்கரனின் தாய் முனியம்மாள் சிவசங்கரனை பற்றி கேட்டபோது அவர் சென்னையில் இருப்பதாக நண்பர்கள் கூறினார்கள். ஆனால் சிவசங்கரனை தொடர்புகொள்ள முயன்றபோது முடியவில்லை. 

போலீசில் புகார்

இதனால் சந்தேகம் அடைந்த முனியம்மாள் ஆனந்தன், தாமோதரன் ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்று கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரனை தேடி வந்தனர். 
இந்த நிலையில் சிவசங்கரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசார் சிவசங்கரனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே சொந்த ஊருக்கு எடுத்து வந்த சிவசங்கரனின் உடலை அவரது நண்பர்கள் ஆனந்தன், தாமோதரன் ஆகியோரின் வீ்ட்டின் முன்பு வைத்து அவரது சாவுக்கான காரணத்தை கேட்டு உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்