ஒரே கல்லில் செதுக்கிய 9 அடி உயர வெங்கடாசலபதி பெருமாள் சிலை

ஒரே கல்லில் செதுக்கிய 9 அடி உயர வெங்கடாசலபதி பெருமாள் சிலை

Update: 2022-02-20 17:13 GMT
அனுப்பர்பாளையம், பிப்.21-
திருப்பூரை அடுத்த   திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகன் குமாரவேல் சிற்பக் கலைக்கூடத்தில் 9 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன வெங்கடாசலபதி பெருமாள் சிலை செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் சுமார் 4½ டன் எடை கொண்ட அந்த சிலை மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. வெங்கடாசலபதி பெருமாள் சிலையின் மார்பு பகுதியில் லட்சுமியும், காதுகளில் மகரம் அணிந்தும்,  வலதுகையில் சக்கரமும், இடதுகையில் முழுசங்கும் இருப்பது போல சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனது வலதுகையில் வரதமும், இடதுகையில் கடியஸ்தமும், இடுப்பில் யாழியும், தாமரை மீது வெங்கடாசலபதி பெருமாள் நிற்பது போன்றும் சிலை உள்ளது. இந்த சிலையை சிற்பி குமாரவேல் தலைமையில் சிற்பிகள் சங்கர், பிரதீப் உள்ளிட்ட குழுவினர் 6 மாதங்களில் செதுக்கி உள்ளனர். இதுகுறித்து சிற்பி குமாரவேல் கூறியதாவது:- திருமுருகன்பூண்டி சிற்பக்கலைக்கூட வரலாற்றில் 9 அடி உயரத்தில் வெங்கடாசலபதி பெருமாள் சிலையை நாங்கள் முதல்முறையாக செதுக்கி இருப்பது பெருமையாக உள்ளது. ஒரே கருங்கல்லில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பக்தர்களை பக்தி பரவசமாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாமி சிலை சேலம் 5 ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சேலம் வராகி ஆலய வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்காக சிறப்பு பூஜை செய்து பெருமாள் சிலையை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்