கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் சைக்கிள், படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

Update: 2022-02-20 16:52 GMT
கொடைக்கானல்: 


சுற்றுலா பயணிகள்
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொரோனா 3-வது அலை பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த சில வாரங்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை மந்தமாக இருந்தது. 

இந்தநிலையில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததை அடுத்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரித்தது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். 

 போக்குவரத்து நெரிசல்
இதற்கிடையே நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால் கொடைக்கானல் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாக இருந்தது.
 இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். அவர்கள் கார், இருசக்கர வாகனங்களில் படையெடுத்ததால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போக்குவரத்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இருப்பினும் சில இடங்களில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது குறிப்பிடத்தக்கது. 

படகு சவாரி
கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். 
அங்கு நிலவிய சீதோஷ்ண சூழல் மற்றும் இயற்கை அழகினை கண்டு ரசித்ததுட‌ன், தங்களது செல்போன் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். 

மேலும் கொடைக்கானல் ம‌லைப்ப‌குதிக‌ளில் நேற்று பகல் நேரத்தில் இதமான சூழ்நிலையும், மாலை நேரத்தில் அதிக குளிரும் நிலவியது. இந்த சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தவாறு நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும் உற்சாகம் அடைந்தனர். 
நீண்ட நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் அனைத்து சுற்றுலா இடங்களும் களைகட்டியது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்