குடும்ப தகராறில் செவிலியர் அடித்துக்கொலை

லாலாபேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் செவிலியரை அடித்துக்கொலை செய்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-02-20 16:44 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம்
செவிலியர் கொலை 
கரூர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்த வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மனைவி வளர்மதி(வயது 58). இவர் பாப்பக்காப்பட்டி கிராமத்தில் கிராம செவிலியராக பணியாற்றி வந்தார். 
 நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு தனது மொபட்டில்  வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். இரும்பூதிப்பட்டி அருகே சென்றபோது அவரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இரும்பு கம்பியால் தலை மற்றும் பல பகுதிகளில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். 
பலத்த காயமடைந்த வளர்மதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
5 பேருக்கு வலைவீச்சு 
இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வளர்மதியின் மருமகள் பிரீத்தி என்பவர் கடந்த ஆண்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 இதனால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக  கணக்கப்பிள்ளை என்ற ஊரை சேர்ந்த  மாரிமுத்து, செல்லப்பாண்டி, புகழேந்தி, சரவணபுரத்தைச் சேர்ந்த மருதமுத்து, குட்டப்பட்டி தக்காளி என்கின்ற மனோகரன் ஆகிய 5 பேர் சேர்ந்து, வளர்மதியை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்த தலைமறைவாக உள்ள அவர்களை  போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்