பிளாஸ்டிக் குடத்துக்குள் நாயின் தலை சிக்கியது
வெள்ளலூர் சந்தைக்கடை பகுதியில் பிளாஸ்டிக் குடத்துக்குள் நாயின் தலை சிக்கியது.
கோவை
கோவையை அடுத்த வெள்ளலூர் சந்தைக் கடை சாலையோர பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவ்வாறு சுற்றித்திரிந்த நாய் ஒன்று நேற்று சாலையோர குழாய் அருகே அடிப்பக்கம் உடைந்த நிலையில் இருந்த பிளாஸ்டிக் குடத்திற்குள் தண்ணீர் உள்ளதா என்று பார்த்தது.
அப்போது அடிப்புறத்தில் உடைந்து இருந்த வழியாக தலையை உள்ளே விட்டது. இதை தொடர்ந்து உள்ளே விட்ட தலையை மீண்டும் நாயால் வெளியே எடுக்க முடியவில்லை.
இதனால் தொடர்ச்சியாக குரைத்துக் கொண்டு இருந்த நாய் அங்குமிங்கும் சென்று சுவற்றில் மோதியது. இதையடுத்து சுமார் ஒரு மணி நேரமாக பரிதவித்த நாயை மீட்க அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
இதன்படி நாயை பிடித்து பிளாஸ்டிக் குடத்தை லாவகமாக வெட்டி, குடத்தில் சிக்கிய நாயின் தலையை வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தால் மிரண்டு போயிருந்த நாய், தன்னை விடுவித்ததும் நன்றியுடன் வாலை ஆட்டிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.