விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க அலைமோதிய சுற்றுலா பயணிகள்
விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க அலைமோதினர்.;
பென்னாகரம்:
விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க அலைமோதினர்.
சுற்றுலா தலம்
சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில், குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நீக்கப்பட்டதால் நாளுக்கு, நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது. தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்து அருவியில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டுகிறது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
இந்த நிலையில் விடுமுறை நாளையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்தனர். குறிப்பாக மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, மீன் அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, மெயின் அருவி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மகிழ்ச்சி
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். கோடை காலம் தொடங்கும் முன்பே சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியதால் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.