பொம்மிடி அருகே பெண்களிடம் தகராறு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து நிறுத்தம் கடைகள் அடைப்பு
பொம்மிடி அருகே நடைபயிற்சி சென்ற பெண்களிடம் தகராறு செய்தவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன.
பொம்மிடி:
பொம்மிடி அருகே நடைபயிற்சி சென்ற பெண்களிடம் தகராறு செய்தவர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெண்களிடம் தகராறு
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள புதுஒட்டுப்பட்டியை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று மாலை நடைபயிற்சி சென்றனர். அப்போது பண்டார செட்டிப்பட்டி சேர்ந்த வாலிபர்கள் சிலர் மது போதையில் நடைபயிற்சி சென்ற பெண்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த வாலிபர்கள், பெண்களை அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புது ஓட்டுப்பட்டி மற்றும் பொம்மிடியை சேர்ந்த பொதுமக்கள் ரெயில் நிலையம் எதிரில் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திமா பெனாசிர் மற்றும் பொம்மிடி போலீசார் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போலீசார் குவிப்பு
அப்போது பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதன் காரணமாக பொம்மிடி பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.