பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி கிலோ ரூ6க்கு விற்பதால் விவசாயிகள் கவலை
பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ6க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பொப்பிடி, சோமனஅள்ளி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பேளாரஅள்ளி, எலங்காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் தக்காளிகளை விவசாயிகள் அறுவடை செய்து பாலக்கோடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
பாலக்கோடு மார்க்கெட்டில் இருந்து தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 டன் அளவுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாலக்கோடு பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.150-க்கும், சில்லரையாக ஒரு தக்காளி ரூ.10-க்கும் விற்பனையானது. இந்தநிலையில் தக்காளி விலை மேலும் குறைந்து 15 கிலோ கூடை தக்காளி ரூ.80 முதல் ரூ.90 வரையும், சில்லரையாக ஒரு கிலோ ரூ.6-க்கும் விற்பனையானது. இதனால் தக்காளி விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் தற்போது அறுவடை செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. போதிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் அறுவடை செய்யாததால் தோட்டத்திலேயே தக்காளி அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.