ஓசூரில் பழைய இரும்பு குடோன்களில் திடீர் தீ

ஓசூரில் பழைய இரும்பு குடோன்களில் அடுத்தடுத்து தீ பிடித்தது.

Update: 2022-02-20 16:32 GMT
ஓசூர்:
ஓசூர் ராம்நகர் பகுதியில் உசேன் மற்றும் முபாரக் ஆகியோர் பழைய இரும்பு குடோன்களை நடத்தி வருகின்றனர். அங்கு பழைய இரும்பு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காலி பாட்டில்கள் போன்றவற்றை மூட்டை, மூட்டையாக வைத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று அந்த குடோன்களில் அடுத்தடுத்து தீ பிடித்தது. இந்த தீ மற்ற பகுதிகளுக்கும் பரவி மளமள என்று எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.
இதனால் தீ விபத்து குறித்து ஓசூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து தேன்கனிக்கோட்டையில் இருந்து கூடுதல் வாகனம் வரவழைக்கப்பட்டது. அதன் பின்னரே தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில் குடோன்களில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்