கோவையில் பூக்கள் விலை உயர்வு

கோவையில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்ந்தது.

Update: 2022-02-20 16:29 GMT
கோவை

கோவை பூ மார்க்கெட்டுக்கு காரமடை, அன்னூர் உள்பட கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் மற்றும் வெளிமாநில பகுதிகளில் இருந்து, பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. 

இங்கு சிறிய வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். மேலும் கேரளாவிற்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன. இதனால் எப்போதும் பூ மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று முகூர்த்தம் காரணமாகவும், வரத்து குறைந்ததாலும் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.500-க்கு விற்ற மல்லிகை நேற்று ரூ.1,200-க்கு  விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் கடந்த வாரம் ரூ.400-க்கு விற்ற முல்லை, ரூ.1200-க்கும் விற்பனையானது. மற்ற பூக்கள் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:-
கோழிக்கொண்டை-ரூ.160, காக்கடா- ரூ.500, அரளி-ரூ.480, சிறிய பட்டன் ரோஸ்-ரூ.160, சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 15 பூக்கள் கொண்ட ரோஜா கட்டு ரூ.160-க்கும், வழக்கமாக ரூ.2,000-க்கு விற்கும் கல்யாண மாலை ரூ.4,000 வரை விலை போனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

பனியின் தாக்கம் அதிகரிப்பின் காரணமாக மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. மேலும் முகூர்த்த தினம் என்பதால் பூக்கள் தேவை அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. 

பனியின் தாக்கம் குறைந்ததும் பூக்கள் வரத்து அதிகரித்தால், வரக்கூடிய நாட்களில் பூக்கள் விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்