நெய்வேலி அருகே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி வர்த்தக சங்கத்தினர் மறியல்

நெய்வேலி அருகே விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி வர்த்தக சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-02-20 16:21 GMT
நெய்வேலி, 

விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மந்தமாக நடைபெறுவதாகவும், சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்,  சாலையின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி அடுத்த இந்திரா நகர் ஊராட்சி மற்றும் வடக்குத்து ஊராட்சியை சேர்ந்த வர்த்தகர்கள் சங்கத்தினர் நேற்று காலை என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வர்த்தகர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வீரப்பன் இந்திரா நகர் வர்த்தக சங்க சிறப்பு தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சாலை மறியல்

இதில் வர்த்தக சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், சேகர், செல்வ முத்துக்குமரன், மனோகரன், கணேசன், வடக்குத்து ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சடையப்பன், இந்திராநகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த ஜோதி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட மாணவரணி தலைவர் தங்கப்பாண்டியன், திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த வடக்குத்து கிராம நிா்வாக அலுவலர் சந்தான கிருஷ்ணன், நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற வர்த்தக சங்கத்தினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்