கல்லாபுரம் அருகே மாவளம்பாறை பகுதியில் நெல் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்

கல்லாபுரம் அருகே மாவளம்பாறை பகுதியில் நெல் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்

Update: 2022-02-20 16:17 GMT
தளி:
கல்லாபுரம் அருகே மாவளம்பாறை பகுதியில் நெல் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாகக்கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அழித்து வருகிறது. அதை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த ஜூலை மாத இறுதியில் தென்மேற்கு பருவமழையும் அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் வடகிழக்கு பருவ மழையும் அமராவதி அணையின் நீராதாரங்களில் தீவிரம் அடைந்தது.
நடவுப் பணி
இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டதால் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் அணையும் அதன் முழு கொள்ளளவை நெருங்கியது. அதைத்தொடர்ந்து கல்லாபுரம்-ராமகுளம் வாய்க்காலில் கடந்த ஜனவரி மாதம் 2-ம் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் நெல் நாற்றங்கால் அமைத்ததுடன் நிலத்தை உழுது பண்படுத்தி சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வந்தனர். ஒருபுறம் உழவு மறுபுறம் நெல் நாற்று நடவு என சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.
கடைமடை பகுதியில் டிராக்டர் மூலம் நிலத்தை உழுது மாடுகள் பூட்டிய பரம்பு கொண்டு சமன் செய்து நாற்று நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வானம் பார்த்த பூமியாக இருந்த கல்லாபுரம் அருகே உள்ள மாவளம்பாறை பகுதி தற்போது எந்திரங்கள், ஏர் கலப்பை, ஆட்கள் மற்றும் எந்திரத்தின் மூலம் நேரடி நடவு பரபரப்பாக காட்சி அளித்து வருகிறது.

மேலும் செய்திகள்